Published Date: August 10, 2024
CATEGORY: CONSTITUENCY

உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு முதலிடம் பெற்று சாதனை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேச்சு.
மதுரையில் தமிழ் புதல்வன் திட்டத்தை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் துவக்கி வைத்து, உயர்கல்வி சேர்க்கையில் இந்தியா அளவில் முதலிடம் என்னும் மிகப்பெரிய சாதனையை தமிழ்நாடு படைத்துள்ளது என்றார்.
கோயம்புத்தூரில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12 வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 உயர் கல்வித் தொகை வழங்கும் தமிழ் புதல்வன் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார். இதையொட்டி மதுரை கல்லூரியில் நடந்த விழாவில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ. தளபதி ஆகியோர் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டத்தில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் தலா ரூபாய் 1000 உயர்கல்வி உதவி தொகையை பெறுவதற்கான வங்கி ஏடிஎம் அட்டைகளை வழங்கினர்.
இவ்விழாவில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கல்வி வளர்ச்சி மற்றும் பொது சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் வழங்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். தமிழ்நாட்டில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகள் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள் வாயிலாக ஆண்டுதோறும் சராசரியாக 7,72,000 மாணவர்கள் மேல்நிலைக் கல்வியை நிறைவு செய்கிறார்கள். இதில் கல்லூரிகளில் சேர்ந்து பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை இந்திய அளவில் தமிழ்நாட்டில் மிக அதிகமாகும். உயர்கல்வி சேர்க்கையில் இந்திய அளவில் முதலிடம் என்ற மிகப்பெரிய சாதனையை தமிழ்நாடு படைத்துள்ளது.
தமிழ்நாட்டில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 3 இலட்சம் மாணவிகளுக்கும் அதிகமாக பயன்பெற்று வருகின்றனர். அதேபோல பள்ளிக்கல்வி முடித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் அவர்களுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டத்தை முதல்வர் தொடங்கியுள்ளார். 9779 மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர். அரசு பள்ளிகளில் பயின்ற ஏழை மாணவர்களை எதிர்காலத்தில் சாதனைளர்களாக உருவாக்கிடவும், அரசு பள்ளி மாணவரின் உயர்கல்வி சேர்க்கையை உயர்த்திடவும் தமிழ் புதல்வன் திட்டம் வழிவகை செய்யும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.
இந்நிகழ்வில் மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் தினேஷ் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், மாநகராட்சி துணை மேயர் நாகராஜன், மண்டல தலைவர் பாண்டிச்செல்வி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை துணை இயக்குனர் குணசேகரி, மாவட்ட சமூக நல அலுவலர் காந்திமதி, மாமன்ற உறுப்பினர் லக்க்ஷிகா ஸ்ரீ உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Media: Dinakaran